தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய இளையராஜா 75 நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று திரைப்பட நடிகர்களும், இயக்குனர்களும், திரைத்துறையை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், நந்தனம் ymca மைதானத்தில் கூடியிருந்தனர். முதல்நாள் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரே மேடையில் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் இருவரும் தோன்றி மிக இயல்பாக மகிழ்ச்சியாக தங்கள் பழைய நினைவுகளை பேசிக் கொண்டதோடு ஏ ஆர் ரஹ்மான் இசைக்க 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை பாடினார் இளையராஜா. இந்தப் பாடல் மணிரத்னம் இயக்கிய 'மௌனராகம், படத்தில் இடம்பெற்றது. மணிரத்னம் இளையராஜா கூட்டணியில் உருவான படங்கள் அனைத்திலுமே பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை. மௌன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், இதயத்தை திருடாதே, தளபதி, என அந்தப் பட்டியல் நீளும். இப்படிப்பட்ட அந்தக் கூட்டணி தளபதிக்கு பின் பிரிந்து தனது ரோஜா படத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மானை மட்டுமே இசையமைப்பாளராக தன் படங்களுக்கு பயன்படுத்தினார் மணிரத்னம். திரையில் பிரிந்ததில் இருந்தே நிஜத்திலும் பெரிதாக தொடர்பில்லாமல்தான் இவர்கள் இருவரும் இருந்தனர். இந்நிலையில் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் மணிரத்னம் கலந்துகொண்டது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. மேடைக்கு மணிரத்னம் வந்தபோது இருவரும் மிக இயல்பாக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டனர். இளையராஜா, "என்ன மணி வயசாயிருச்சு போல... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்று சிரித்துக்கொண்டே கேட்க மணிரத்னம் "நீங்கதான் அப்படியே இருக்கீங்க வயசு ஆகாம" என்று கூறினார். "அதான் 75 ஆச்சுல" என்று இளையராஜா சிரிக்க, "75 என்பது வெறும் நம்பர் தான். உங்களுக்கும் உங்க இசைக்கும் வயசே ஆகல" என்றார் மணிரத்னம். இந்த உரையாடல் இருவரின் ரசிகர்களையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இளையராஜா, மணிரத்னம் இருவரது பிறந்த தினமும் ஒரே நாளில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.