குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் மணிகண்டன் பேசியதாவது: இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன் மிகுந்த பதற்றம் இருந்தது. நீங்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்து, நேர்மையுடன் விமர்சனம் செய்து பாராட்டியதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றி. இப்படி ஒரு கதை இருக்கிறது என்று என்னிடம் முதலில் சொன்னது ரமேஷ் தான். இயக்குநர் வினாயக் கதை சொன்ன விதம் மிகவும் நன்றாக இருந்தது. பின்னணியில் இசையை ஓடவிட்டு கதையை சொன்னார். அவருக்கு இந்தக் கதை மீது இருந்த பிடிப்பு என்னைக் கவர்ந்தது. தயாரிப்பாளர்களிடம் மணிகண்டனை வைத்து எடுக்க வேண்டுமா என்று பலர் கேட்டுள்ளனர். ஆனால் அவர் என்னை நம்பினார். தயாரிப்பு தரப்பு குழுவினருக்கு என் நன்றி.
இந்தப் படத்தின் எடிட்டர், கேமராமேன் என்று அனைவரும் இரவு, பகல் பாராது உழைத்தனர். இந்தப் படம் குறித்து எங்களிடம் தயாரிப்பாளர்கள் ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. அந்த அளவுக்கு எங்களை நம்பினார்கள். இந்தப் படத்தில் வேலை செய்த பலர், படம் குறித்து மற்றவர்களிடம் சிலாகித்துப் பேசினார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. நான் சின்ன ரோல் செய்தால் கூட ரமேஷ் திலக் என்னை அழைத்து பாராட்டுவார். என்னை எந்த இடத்திலும் எப்போதும் விட்டுக்கொடுக்காதவர் ரமேஷ் திலக். தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். எனக்கு விஜய் சேதுபதி அண்ணா எப்படியோ, அதுபோல் தான் ரமேஷ் திலக்கும்.
இந்தப் படத்தில் நடித்த அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தனர். அது படத்துக்கும் உதவியது. சமூகத்தைப் புரட்டிப் போட்ட படங்களை எடுத்திருந்தாலும் பாலாஜி சக்திவேல் சார் எங்களோடு எப்போதும் இயல்பாகவே பழகுவார். மீதாவின் சின்சியாரிட்டி என்னை மிகவும் வியக்க வைத்தது. ஷான் ரோல்டன் சார் இசையமைக்கிறார் என்பதால் தான் இந்தப் படத்துக்கு கவனம் கிடைத்தது. எங்களை நம்பியதற்கும், அருமையான இசையை வழங்கியதற்கும் அவருக்கு என்னுடைய நன்றி. நாங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்துக்கும் உங்களுடைய ஆதரவால் வெற்றி என்கிற பலன் கிடைத்துள்ளது.