இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘3.6.9’. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி ஜி எஸ் தயாரித்து நடித்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு சுமார் 450 தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தை 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படமாக்கி படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, "தனிப்பட்ட முறையில் எனக்கும், இந்த படத்திற்கும் தொடர்பு இருக்கு. 3.6.9 என்னுடைய கார் நம்பர். என் காருக்கு இந்த நம்பர் எடுத்த போது இதன் விளக்கம் எனக்கு தெரியாது. அதன் பிறகு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இயக்குநர் ஆனந்த் எப்பவுமே அவரு வேலை செய்யும் படங்களுக்கு வந்துருங்கனு மட்டும் சொல்லுவார். மத்தபடி எந்த தகவலும் சொல்ல மாட்டார். அவரிடம் தொந்தரவு பண்ணி கேட்ட போதுதான் நான் தயாரித்து இருக்கிறேன் வந்துருங்கன்னு சொன்னார். 'என்னய்யா இவ்ளோ நாள் என்னை வச்சி படம் எடுக்காம சத்தமே இல்லாம இரண்டு படம் தயாரிச்சிருக்கன்னு திருப்பி கேட்டேன். நம்ம நண்பர்கள் சேர்ந்து பண்ணினார்கள் நாம உதவி பண்ணிருக்கோம் வாங்கன்னு சொன்னார். அப்புறம் என்ன கதை, ட்ரைலர்-லாம் போடுவீங்களா எதையும் பாக்காம எதை பத்தி பேசுறது என்று திருப்பி நான் தொந்தரவு பண்ணி கேட்டேன். அப்புறம் முன்னோட்டம் மாறி ஒரு டீசர் போடுவோம் என்று சொன்னார்'. பின்பு டீசர் போட்டுக் காண்பித்தார்கள். மூன்று முறை போட்டுக் காண்பித்தார்கள். அப்போதே தெரிந்து விட்டது, இந்த முன்னோட்டத்துக்கு பின்னாடி பெரிய வெள்ளோட்டம் இருக்கு. நிறைய விஷயங்களை வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார் என்று புரிந்தது.
இப்படத்தை பற்றி பேச வேண்டியது இருக்கும் போது, படத்தை பற்றி ஒரு முழு விவரங்களோடு பத்திரிக்கை செய்தி குறிப்பு அனுப்பினார். நான் ஏன் வரணும் என்று திருப்பி கேட்டபோது, நீங்க ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் இந்த படமும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அது தொடர்பாக நீங்கள் சம்மந்தப்பட்டுள்ளீர்கள் அதற்காகவும் நீங்கள் வரலாம் என்று பேசினார். இயக்குநர் பேசுகையில் நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் கதையை பற்றி அதிகம் சொல்லவில்லை. 'திருத்துவதற்கு கதை வரவில்லை சிந்திக்கிற மாதிரி கதை வச்சிருக்கேன்' என்று சுருக்கமாக தன் உரையை முடித்து கொண்டார்.
'தல இருக்கும் போது வால் ஆட கூடாது' அதனால் அப்பா நிறைய பேசுவார். படக்குழு அனைவரும் அழகாக சுருக்கமாக பேசி முடித்துவிட்டனர். இயக்குநர் அளவாக பேசணும் என்று பயிற்சி கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் பேசிய அனைவரும் தங்களது அப்பா, அம்மாவை நினைவு கூர்ந்து தன் உழைப்பால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என நேர்த்தியாக இங்கு பதிவிட்டார்கள். சினிமா திட்டுபவனையும் வாழ்த்தும் பாராட்டுபவனையும் வாழ வைக்கும். இன்றைக்கு ஒரு படத்தை விமர்சித்து யூ ட்யூபில் பதிவிட்டு அதன் மூலம் சம்பாதிப்பவர்கள் அனைவரும் சினிமாவை வைத்து தான் வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார்கள். அந்த வகையில் சினிமா எப்போதுமே 'வாழவைக்கிறவனையும் வாழ விடும் வாழ கெடுக்கிறவனையும் வாழ வைக்கும்' அது தான் சினிமாவை நம்பி இருக்கிற ஒரு பெரிய தொழிலுக்கான மரியாதை.
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் இவ்ளோ வசூலித்தது என்று பேசுகிறோம். ஆனால் எங்கோ ஒரு தெருக்கோடியில் இருந்து தனக்கான ஒரு மேடையை அமைத்துக்கிட்டு ஒரு சில கோடிகளில் பல கோடி மக்களுக்கு தன்னை அடையாளப்படுத்தனும் என்று ஒரு பெரும் முயற்சியோடு பணியாற்றி உள்ளார்கள். 21 வருடத்திற்கு பிறகு பாக்யராஜ் சார் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொன்னார்கள். கதாநாயகனாக அவர் திரும்ப வந்திருக்கலாம். ஆனால் கதைக்கும் திரைக்கதைக்கும் என்றைக்கும் ஒரே நாயகன் தமிழ் சினிமாவில் அவர் மட்டும் தான். இன்னொரு 21 ஆண்டுகள் கழித்தும் எல்லாருக்கும் அவர் தான் முன்னோடியாக இருப்பார். இன்றைக்கு என்னிடம் வந்து ஒரு அடல்ட் காமெடி படம் பண்ணுவீர்களா என்று கேட்டார்கள். பாக்யராஜ் சார் படம் மாதிரி பண்ணுவீங்கன்னா சொல்லுங்க தாராளமா நம்பி உங்களோடு வருகிறேன் என்று சொன்னேன். ஒரு அடல்ட் காமெடி படத்தை நேர்த்தியாக குடும்பங்கள் விரசம் இல்லாமல் பார்த்து ரசிக்கிற அளவிற்கு ஒரு படம் கொடுத்த இயக்குநர் தான் பாக்யராஜ். அந்த ஜானரில் அதிகம் படம் வெளிவருவதில்லை. வியாபாரத்திற்காக நிறைய படங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. உலகத்தினுடைய அத்தனை சாராம்சங்களும் 3,6,9 என்கிற நம்பரில்தான் நடக்கும், இதற்குள்ளே தான் நம்ம வாழ்க்கை அடங்கியிருக்கு. இதனை கதைக்களமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்று சொல்லும் போது 'மூளைகாரர் என்று சொல்வதை விட மூளை இல்லாத ஒரு ஆள் இந்த படத்தை எடுக்க முடியாது என்று சொல்லலாம்' என்று பேசினார்.