ரஜினியின் 'பேட்ட' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் 'மாஸ்டர்' படம் மூலம் பிரபலமானார். பின்பு தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்ததையடுத்து தற்போது விக்ரமின் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் நயன்தாரா குறித்து அவர் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்திருந்தார். "ஒரு முன்னணி நடிகை மருத்துவமனை காட்சியில் ஃபுல் மேக்கப் போட்டு, ஒரு முடி கூட கலையாமல் இருக்கிறார். சாகும் தறுவாயில் இருக்கும் ஒருவர் எப்படி அப்படி இருக்க முடியும். கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு சின்ன ரியலிஸ்டிக் கூட வேண்டாமா" எனக் கூறியிருந்தார்.
இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா ஒரு பேட்டியில், "மருத்துவமனை காட்சியில் பக்காவாக இருக்க வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், முடியெல்லாம் கலைந்து போயா அங்கு இருக்க முடியும். கமர்ஷியல் படத்துக்கும் ரியலிஸ்டிக் படத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. இயக்குநர் என்ன கேட்கிறாரோ அதைத் தான் நான் கொடுக்க முடியும். அந்தந்த படத்திற்கு ஏற்றது போலத்தான் நாம் நடிப்பைக் கொடுக்க முடியும். அது படத்திற்கு ஏற்றது போல் மாறுபடும்" எனக் கூறினார்.
இதையடுத்து தற்போது ஒரு பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மாளவிகா மோகனன் பேசியுள்ளார். அதில், "ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஹீரோக்களை எப்படி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறோமோ அதேபோல் ஹீரோயின்களையும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்க வேண்டும். கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோனே ஆகியோர்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில்லை. அவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் தான்" எனப் பேசியுள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாற லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது நயன்தாரா தான். மறுபடியும் நயன்தாரா பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமர்சித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், நயன்தாரா மீது தான் பெரும் மதிப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது கருத்து பெண் நடிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லைப் பற்றியதே தவிர எந்த குறிப்பிட்ட நடிகரைப் பற்றியும் அல்ல. நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன், ரசிக்கிறேன். மேலும் ஒரு சீனியராக அவர் வளர்ந்து நிற்கும் அவரது சினிமா பயணத்தை பார்த்துள்ளேன். தயவு செய்து மக்கள் அமைதியாக இருக்க முடியுமா" எனக் குறிப்பிட்டுள்ளார்.