சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட்ஸ் நிறுவனமும் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்தன. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை விதிக்கக்கோரி சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது தொடர்பாக சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அளித்த புகார் மனுவில், இணை தயாரிப்பாளரான தங்களிடம் முறையான அனுமதியைப் பெறாமல் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 2டி நிறுவனம் விற்றுவிட்டதாகவும், இப்படம் தொடர்பாக இரு நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை 2டி நிறுவனம் மீறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இடைக்காலத் தடை விதித்து, இந்த வழக்கை ஒத்திவைத்து.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தரப்பில் முக்கிய ஆவணங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிற்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிற்கிற்கான தடை நீங்கியதால் இப்படத்தின் பணிகள் இனி வரும் நாட்களில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.