Skip to main content

சர்ச்சையில் சிக்கிய இளையராஜாவின் பாடல்... வரியை மாற்றிய படக்குழு!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

 

maayon movie song controversy

 

இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் 'மாயோன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், ராதா ரவி, மாரிமுத்து ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் "மாயோனே மணிவண்ணா..." என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள இப்பாடலை ரஞ்சனி  மற்றும் காயத்திரி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 

 

ad

 

இதையடுத்து இப்பாடலில் தவறு இருப்பதாக கூறி இசை ஆர்வலர்கள் சர்ச்சையை கிளப்பினர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ''மாயோனே மணிவண்ணா..' என தொடங்கும் பாடலில் 'தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..' என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் 'தாள் பணிந்தோம்' என்பதற்கு பதிலாக 'தாழ் பணிந்தோம்' என்றிருக்கிறது. 'தாள்' என்பதன் பொருள் வேறு. 'தாழ்' என்பதன் பொருள் வேறு. பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி, மற்றும் காயத்ரியும் 'தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள். ஆனால் லிரிக்ஸ் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், 'தாழ் பணிந்தோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவு படுத்தவேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார். 

 

இதற்கு பதிலளித்த படக்குழுவினர், “கதைச்சூழலின் படி ‘தாள் பணிந்தோம்’,‘ தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானதுதான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூறு இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது. இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டி காட்டியதை ஏற்றுக்கொண்டு, 'தாள் பணிந்தோம்' என லிரிக்ஸ் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்