Skip to main content

"தயாரிப்பாளராக எனக்கு லாபம் இல்லை" - மனம் திறக்கும் ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Suresh Kamatchi

 

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ‘மாநாடு’ திரைப்படம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில், ‘மாநாடு’ படம் தொடங்கியது, பட உருவாக்கம் மற்றும் ரிலீஸில் இருந்த சிக்கல்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் கடந்து வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. படத்தின் பிசினஸ் தொகைக்கு மேலாக கடன் வாங்கினால்தான் நமக்குப் பிரச்சனை. நான் பிசினஸ் என்னவென்று தெரிந்து, அதற்குள்தான் நின்றேன். படம் தொடங்கியதிலிருந்து முடிவுவரை பல பிரச்சனைகள் இருந்தன. முடியும்போது அனைத்தும் வெற்றியாக முடிந்தது. படம் தொடங்கும்போதே இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் சிம்புவிற்கு பிசினஸ் டவுனாக இருந்தபோதிலும், ‘மங்காத்தா’விற்குப் பிறகு வெங்கட் பிரபு பெரிய ஹிட் கொடுக்காதபோதிலும் 30 கோடியில் பட்ஜெட் போட்டேன். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். 

 

பட ரிலீஸ் நேரத்தில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. நடந்தது என்ன... நடந்தது என்ன... என்று பல பேட்டிகளில் சொல்லிவிட்டேன். இதெல்லாம் பட ரிலீஸில் சகஜம்தான். சேட்டிலைட் உரிமை விற்பனையான பிறகு படத்தை வெளியிடலாம் என்று நான்தான் உறுதியாக இருந்தேன். படத்திற்கு எந்தவிதமான மலிவான விளம்பரைத்தையும் நான் செய்யவில்லை. அதற்கான தேவை எனக்கு எந்த இடத்திலும் வரவில்லை. பட்ஜெட்டை மீறி சில விஷயங்கள் சென்றன. ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இறங்கிவிட்டோம். அதில் சமரசம் செய்தால் மக்கள் காரித்துப்பிவிடுவார்கள். எந்த அளவிற்கு சமாளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சமாளித்து வந்துவிடுவோம் என்று நினைத்தேன். 

 

ad

 

முதல்நாள் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும்போதே படத்தின் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. ஒரு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ அந்த அளவிற்குப் படம் வெற்றிபெறும். சிம்புவே கூப்பிட்டு இந்த வாய்ப்பைக் கொடுத்ததால் நிச்சயம் நல்லபடியாக நடித்துக்கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தைத் தயாரித்தேன். அதன் பிறகு, அவரிடமிருந்து சரியாக ஒத்துழைப்பு இல்லை என்றவுடன் அதிலிருந்து விலகிவிட்டேன். அந்த இடத்திலும் தயாரிக்கிறேன் என்று நின்றிருந்தால் நான் தோற்றிருப்பேன். பின் அனைவரும் உட்கார்ந்து பேசி முறைப்படி அக்ரிமெண்ட் போட்டு படத்தை ஆரம்பித்தோம். அதேதான் ரிலீஸ் நேரத்திலும். நான் ஏன் கடன்காரனாக நிற்க வேண்டும்... சேட்டிலைட் உரிமையை விற்றுவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஒரு தயாரிப்பாளராக நான் எல்லா நேரத்திலும் உறுதியாக நின்றிருக்கிறேன். ஒரு முடிவு எடுத்துவிட்டு பின் உங்களால்தான் தோல்வி என்று மற்றொருவரைக் குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய படங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் நான்தான் பொறுப்பு. 

 

புது முயற்சி எடுத்துள்ளோம். அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது என வெங்கட் பிரபுவே சில நேர்காணலில் சொன்னார். ஆனால், நான் எந்த நேர்காணலிலும் அப்படிச் சொல்லவில்லை. ஏனென்றால் இந்தக் கான்சப்ட் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இந்தப் படத்தை வாங்கிய அனைவருக்குமே லாபம்தான். தியேட்டரிக்கல், சேட்டிலைட், டிஜிட்டல் வாங்கிய அனைவருக்குமே லாபமாக இருந்தபோதிலும் தயாரிப்பளார் எனக்கு லாபம் இல்லை. அதற்குக் காரணம் சிம்புவின் முந்தைய பட வசூல். ரிலீஸிற்குப் பிறகு படம் வெற்றிபெறுவது என்பது வேறு. ரிலீஸிற்கு முன்பு சில விஷயங்கள் உள்ளன. அது எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய படம் வெற்றி அவ்வளவுதான். இதற்கு யாரையும் குறை சொல்லவும் முடியாது. சிம்புவின் முந்தைய படம் வெற்றிபெற்றிருந்தால் எனக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். என்னுடைய படத்திற்குப் பிறகு வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும்".

 

 

சார்ந்த செய்திகள்