தன்னுடைய கலையுலக அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
புரியாத பாஷையில் பேசி நடிப்பது பெரிய விஷயம் அல்ல. என்னுடைய மாமா வைத்தி, தேங்காய் சீனிவாசன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் இதுபோன்று இதற்கு முன் பேசியுள்ளனர். அதுபோல் நாமும் முயன்று பார்ப்போம் என்று தான் 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படத்தில் வித்தியாசமான மொழியில் பேசி நடித்தேன். தம்பி சிம்புதேவனின் ஐடியா தான் அது. டப்பிங்கில் கஷ்டமாக இருக்கும் என்று லாரன்ஸ் மாஸ்டர் கூட சொன்னார். ஆனால் நான் அனைத்தையும் எழுதி வைத்துக்கொண்டதால் சரியாகவே பேசினேன்.
என்னுடைய மனைவி எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய வரம். என்னுடைய குடும்பம் மிகவும் டீசன்டானது. அதில் கொஞ்சம் குறும்புக்காரன் நான் தான். என்னால் போலியாக வாழ முடியாது. ஒருவரிடம் பழகினால் உண்மையாகப் பழக வேண்டும். பிடிக்கவில்லை என்றாலும் நேரடியாக சொல்லிவிட வேண்டும். என்னிடமும் குறைகள் இருக்கின்றன. அதை என்னிடம் யார் சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்வேன். எம்ஜிஆர் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் உடன் அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
விஜயகாந்த் எனக்கு அம்மா மாதிரி. அவரை அனைவரும் விரும்புவார்கள். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர் அவர். வீடு என்று இருந்தால் அவ்வப்போது சண்டை வர வேண்டும். அதுபோல் விஜயகாந்த் சாருக்கும் அவ்வப்போது கோபம் வரும். ஆனால் அது ஒரு வினாடி தான் இருக்கும். அடுத்த வினாடியே நம்மை அழைத்து கூல் செய்துவிடுவார். சொக்கத்தங்கம் என்பது அவர் நடித்த படம். உண்மையிலும் அவர் ஒரு சொக்கத்தங்கம் தான்.
நான் நடித்த உத்தம வில்லன் படத்தில் கடிதம் படிக்கும் ஒரு காட்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரவேற்புக்கு முக்கியமான காரணம் கமல் அண்ணா தான். அவர் அந்த அளவுக்கு நடிக்கும்போது நாமும் நம்முடைய பங்கைச் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் நடிக்கும்போது அவர் அவ்வளவு பாராட்டினார். அவருடைய பாராட்டு என்னை இன்னும் உற்சாகப்படுத்தியது. எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று அவரும் விரும்பினார். அந்தக் காட்சியின் அமைப்பு காரணமாகவே அதற்கு வரவேற்பு கிடைத்தது. தேவர்மகன் படத்தில் ரேவதிக்கு பார்த்த மாப்பிள்ளை ஓடிப்போவார். அனைவரும் அழுவார்கள். அந்த நேரத்தில் கமல் அண்ணா எச்சில் விழுங்கிவிட்டு "என்னைக் கல்யாணம் செய்துகொள்கிறாயா?" என்று ரேவதியிடம் கேட்பார்.
அவர் விழுங்கிய எச்சிலில் அவருடைய பழைய காதலும் புதைந்துவிட்டது. இதை நான் கமல் அண்ணாவிடம் சொன்னபோது அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அதேபோல் பாட்ஷா படத்தின் இடைவேளை காட்சியில் வில்லன் கத்தியை வைத்து தாக்க வரும்போது ரஜினி அண்ணா சலிப்பாக ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். "இதெல்லாம் வேண்டாம் என்று தானே நான் இங்கு வந்து வாழ்கிறேன்" என்பதுதான் அதற்கான அர்த்தம். இதை நான் ரஜினி சாரிடம் சொன்னபோது அவரும் ஆச்சரியப்பட்டார். என் மகன் உட்பட பலரையும் பார்த்து நான் இதுபோல் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.