களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தின் மூலம் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். இதன்பின் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர், அடுத்து டான்ஸ் மாஸ்டர் என்று பணியை மேற்கொண்டு வந்தார். கடந்த 1973ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்னும் படத்தில் கமல்ஹாசனுக்கு முக்கியவேடம் ஒன்றை கொடுத்து நடிக்க வைத்தார் கே.பாலசந்தர். அதன்பின் தமிழ் சினிமாவில் நாயகனாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளார். தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல் சினிமா துறைக்கு வந்து 60 வருடங்கள் ஆகிவிட்டது. இதை பலரும் கொண்டாடி வருகிறார்கள், குறிப்பாக கமலின் ரசிகர்கள் கமலை பற்றி மற்ற சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு தொகுப்பாக யூ-ட்யூபில் வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “ நான் இதற்கு முன்பு பல மேடைகளில், நேர்காணல்களில் நான் மிகப்பெரிய கமல்ஹாசன் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். எனக்கு தெரிந்து சிறு வயதிலிருந்து நான் பார்த்த, எனக்கு மிகவும் பிடித்த படங்களாக கமல்ஹாசன் படங்கள் இருந்திருக்கிறது. நான் சினிமாவில் துணை இயக்குனராக யாரிடமும் பணிபுரியாமல் படம் எடுத்ததற்கு கமல்ஹாசனின் படங்கள்தான் என்று சொல்லுவேன். நான் எடுத்த முதல் படம் மாநகரத்தின்போது, அவரை 10 நிமிடம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் எதுவுமே பேசாமல், அவரை கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த மொமண்டை நான் அவ்வளவு ரசித்து பார்த்தேன்.
கமல்சாரை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்தை சொல்லுவேன் கண்டிப்பாக இது என் குடும்பத்திற்கு பழைய நினைவுகளை தூண்டும். 90களில் கோடை விடுமுறையின்போது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வருவார்கள். அதற்காக விசிஆர் வாடகைக்கு எடுக்கும் பழக்கம் இருந்தது. எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிடி கடை இருந்தது. அதில் நான்கு கமல் படங்கள்தான் இருக்கும். அதை மட்டும்தான் நான் ஒவ்வொரு விடுமுறையிலும் வாடகைக்கு எடுப்பேன். எங்கள் உறவினர்களும் அதைதான் பார்க்க விடுவேன். வேறு எந்த படமும் பார்க்க விடமாட்டேன். சிடி கடைக்காரர் என்னிடம் வந்து சத்யா படம் கேசட்டில் சண்டை காட்சி பிலிம் தேய்ந்தேவிட்டது ஒழுங்காக நீயே சொந்தமா அதை வாங்கிக்க என்று சொல்லி அதை நான் வாங்கினேன். அத்தனை முறை ஒரு பார்த்திருக்கிறேன்.
தற்போது சினிமாவிற்கு வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், சினிமாவில் இருப்பவர்களுக்கும் கூட கமல்சார் எப்படி சில விஷயங்களை எடுத்திருப்பார் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரிடம் புதிய தலைமுறையினர் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் லோகேஷ்.