![Lokesh Kanagaraj joins with Allu Arjun](http://image.nakkheeran.in/cdn/farfuture/zDcYNm4miItMIBSWNc7yjhwy3C-i_K5ARkXuHyUaG1o/1655457805/sites/default/files/inline-images/486_4.jpg)
2017ஆம்-ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் 'கைதி' மற்றும் விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படங்கள் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள 'விக்ரம்' படம், சில வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடியும் உலகம் முழுவதும் ரூ.275 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் ஆகியோரிடம் லோகேஷ் கதை சொல்லியுள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜுனிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றனர். விஜய்யின் 'தளபதி 67' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.