உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் மக்கள் தேவையின்றி வெளியேறக் கூடாது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான எம்.எம். கீரவானி, 'இளையராஜா' பாடலைக் கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "இனிப்புகள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று சொன்னார்கள். அதனால் நான் இனிப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். அதற்குப் பதிலாக இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் அதிலிருக்கும் இனிமை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்'' என்று தெரிவித்ததோடு இல்லாமல் அத்துடன் "தேனே தென்பாண்டி மீனே" பாடலைப் பாடியிருக்கிறார்.