இயக்குநர் லிங்குசாமி தற்போது பிரபல இளம் தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியை வைத்து 'தி வாரியர்' படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள சிம்பு பாடியிருக்கும் 'புல்லட்' பாடல் நேற்று வெளியானது.
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "நானும் உதய்யும் ரொம்ப வருஷமாக ட்ராவல் பண்ணிக்கிட்டு இருக்கோம். அவருடன் இணைந்து படம் பண்ணுவதற்காக பெரிய அட்வான்ஸ்கூட வாங்கினேன். ஆனால், அந்தப் படம் பண்ண முடியவில்லை. நான் அவர்களுக்கு எதுவுமே செய்யாவிட்டாலும்கூட எனக்கு தொடர்ந்து நல்லது செய்துகொண்டே இருக்கிறார்கள். எங்கள் ஆசிரமத்தில் ஒரு விழா இருக்கிறது வாங்க என்று போன் செய்தால் உடனே வந்து நிற்பார். என்னுடைய நண்பன் உயிரோடு இருக்க காரணம் உதய் சார்தான். ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருந்த அவரை உதய் சார் போன் பண்ணி சொல்லியதால் ஸ்பெஷலாக கவனித்தார்கள். இன்று நல்லபடியாக குணமடைந்து உயிரோடு இருக்கிறான். அதற்கும் அவருக்கு நன்றி.
இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் டி.எஸ்.பி., நாம் எப்போது சார் ஒன்றாக வேலை பார்ப்போம் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். இந்த புல்லட் சாங் முழு பொறுப்பையும் அவரிடமே கொடுத்துவிட்டேன். இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் மூன்று கோடிவரை தயாரிப்பாளர் செலவு செய்துள்ளார். அவருக்கு நன்றி. நடிகர் ராம் பொத்தேனி, க்ரித்தி ஷெட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி.
சில படங்கள் அதுவாக அமைய வேண்டும். நம்மால் வேலை மட்டும்தான் பார்க்க முடியும். சில நேரங்களில் ரன், பையா, சண்டகோழியாக படம் மாறுகிறது. இந்தப் படம் என்னவாக மாறும் என்பது எங்கள் கையில் இல்லை. முழு மனதுடன் இந்தப் படத்தில் வேலை பார்த்திருக்கிறோம் என்பது மட்டும் நிஜம். படம் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும்" எனக் கூறினார்.