ராகவா லாரன்ஸ் தமிழில் இயக்கி நடித்த படம் காஞ்சனா. இந்த அவருடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல் என்று சொல்லலாம். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியில் லட்சுமி பாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸுக்கும், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தொடக்கத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் படத்திலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதன்பின் அக்ஷய்குமார் சமாதானம் செய்து, ரகவா லாரன்ஸையே இயக்க வைக்கியுள்ளார்.
காஞ்சனா படத்தில் திருநங்கையாக சரத்குமார் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுபோல ஹிந்தியில் அமிதாப் பச்சன் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், படக்குழு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது லட்சுமி பாம் படத்தில் தனது லுக்கை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். பலரும் இந்த முயற்சிக்காக அக்ஷய் குமாருக்கு பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்துடன் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில், “நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவில்லா வலிமையைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி. இந்த மங்களகரமான நாளில் எனது 'லக்ஷ்மி' தோற்றத்தை உங்களுடன் பகிர்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் ஆர்வமாக எதிர்நோக்கும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உணர்கிறேன். நாம் சவுகரியமாக உணரும் சூழலின் முடிவில்தான் வாழ்க்கை தொடங்குகிறது இல்லையா?" என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று முன்னமே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.