Skip to main content

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ‘லாபதா லேடீஸ்’

Published on 08/04/2025 | Edited on 08/04/2025
Laapataa Ladies plagiarism issue

பாலிவுட்டில் ஆமிர் கானின் முன்னாள் மனைவி இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘லாபதா லேடீஸ்’(Laapataa Ladies). அமீர் கான் இணைத் தயாரிப்பாளராகத் தயாரித்திருந்த இப்படத்திற்கு ராம் சம்பத் இசையமைத்திருந்தார். திருமணமான இரண்டு இளம் பெண்கள், தங்கள் கணவரின் வீட்டிற்கு செல்லும் போது இரயிலில் ஆள்மாறி சென்ற நிலையில் பின்பு தங்களது கணவரிடம் சென்றார்களா இல்லையா, மனைவியை கண்டுபிடிக்க நாயகன் போராடும் முயற்சிகள் ஆகியவற்றை காமெடி, அரசியல் நையாண்டி கலந்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. 

இப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது. ஆனால் விருது வெல்லவில்லை. இந்த நிலையில் இப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது. இப்படத்தின் கதை அரேபிக்கில் வெளியான ‘புர்கா சிட்டி’ குறும் படத்தைப் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இது குறித்து பேசிய ‘லாபதா லேடீஸ்’ படத்தின் கதையாசிரியரான பிப்லாப் கோஸ்வாமி இந்த விமர்சனங்களை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, “லாபதா லேடீஸ் படத்தின் திரைக்கதை பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. ‘டூ பிரைட்ஸ்’(Two Brides) என்ற தற்காலிக தலைப்புடன் இக்கதையை 2014ஆம் ஆண்டு திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தேன். 

Laapataa Ladies plagiarism issue

எங்கள் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் உரையாடல்கள் 100% ஒரிஜினல். கதைதிருட்டு என சொல்லும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய். இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு எழுத்தாளராக எனது முயற்சிகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரைப்படத் தயாரிப்புக் குழுவின் அயராத முயற்சிகளையும் குறைத்து மதிப்பிடுகின்றன” என்றிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ‘புர்கா சிட்டி’ குறும்படத்தின் இயக்குநர் ஃபேப்ரிஸ் பிராக், “முதலில் நான் படம் பார்ப்பதற்கு முன்பே எனது குறும்படத்தின் கதையுடன் அப்படக் கதை நெருக்கமாக ஒத்துப் போவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். பின்பு படத்தைப் பார்த்தேன், கதை இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும், எனது குறும்படத்தின் பல அம்சங்கள் இப்படத்திலும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்” என்றார்.  

சார்ந்த செய்திகள்