'கனா காணும் காலங்கள்'... விஜய் டிவியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஆரம்ப கால தொடர் இது. தற்போது இதன் வேறு வடிவம் வெப் சிரீஸாக உருவாகி ஒளிபரப்பாகி வருகிறது. அப்பொழுது இந்தத் தொடரில் 'அப்பாவி' பாத்திரத்தில் அறிமுகமானவர் விஜய் வரதராஜ். பின்னர் தமிழ் யூ-ட்யூப் உலகின் தொடக்க காலத்திலேயே 'டெம்பிள் மங்கீஸ்' என்ற சேனலை தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இவரது நண்பர் சாராவுடன் சேர்ந்து இவர் வெளியிட்ட வீடியோக்கள் அப்பாவி என்று நம்பப்பட்ட இவரை 'அடப்பாவி' என்று அழைக்க வைத்தது. கால காலமாக நம்பப்படும் பல்வேறு கூற்றுகளை எளிய நகைச்சுவைகளால் உடைக்கும் இவர்களது வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு.
இந்த டெம்பிள் மங்கீஸ் குழு இணைந்து விஜய் வரதராஜ் இயக்கத்தில் 'குத்துக்குப் பத்து' என்ற வெப் சீரீஸை உருவாக்கி 'ஆஹா' OTT தளத்தில் வெளியிடுகின்றனர். இதன் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. வழக்கம் போலவே ரணகளமாக இருந்த ட்ரெயிலர் மூலம் கதையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற நம் கேள்விக்கு "முழுசா பார்த்தாலும் உங்களுக்கு ஒன்னும் புரியாது. ஜாலியா பார்த்துட்டு என்ஜாய் பண்ற மாதிரி எடுத்துருக்கோம். நண்பர்களுக்குள், நண்பர்களுக்காக நடக்கும் 'கேங் வார்' கதை. ஒரு ஃப்ரெண்டுக்காக சண்டைக்குப் போவோம். அங்க நம்மள அடிச்சு, நம்ம ஆள கூப்பிடுவோம். அது இன்னும் பெருசாகும். இப்படி ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்ட் கதை இது. சின்ன விஷயமா ஆரம்பிச்சு பிரளயமா மாறும்" என்று தன் ஸ்டைலில் கூறினார். இந்த டீமின் நேர்காணல் நக்கீரன் ஸ்டுடியோ சேனலில் வெளியாகி உள்ளது.