
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்குப் பத்மவிபூஷன் விருதுகளும், 19 பேருக்குப் பத்மபூஷன் விருதுகளும், 113 பேருக்குப் பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட உள்ளதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் கலைத்துறையில் நடிகர் அஜீத்குமாருக்குப் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (28.04.2025) நடைபெற்றது. இந்த விருது பெறுவதற்காகத் தனது குடும்பத்தினருடன் நேற்று விமானம் மூலம் அஜித் டெல்லி சென்றடைந்தார். இந்நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பத்ம விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அதன்படி அஜித் குமார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித் பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பத்மபூஷன் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார். திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை அவர் பதித்துள்ளார். ஃபார்முலா 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.