வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்த சரண்ராஜ், ‘குப்பன்’ படம் மூலமாக இயக்குநராகிறார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக அவரைச் சந்தித்த போது பல்வேறு விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
எனக்கு ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நேராக குப்பத்துக்கு சென்றுவிடுவது வழக்கம். அங்கு குப்பன் என்கிற ஒருவர் இருக்கிறார். நீண்டகாலமாக அவர் எனக்கு பழக்கம். ‘குப்பத்தின் வாழ்க்கை முறை குறித்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்’ என்று ஒருநாள் அவர் என்னிடம் கேட்டார். அப்போதிருந்தே அந்த எண்ணம் எனக்குள் தோன்றியது. நிறைய யோசித்தேன். இது கஷ்டமான விஷயம் என்பதும் எனக்கு புரியாமல் இல்லை. அப்போது மனதில் உருவானது தான் 'குப்பன்' படத்தின் கதைக்கரு. குப்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் மார்வாடி பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் படத்தின் கதை.
அதன் பிறகு நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. நாங்கள் நினைத்தது போல் நடிகர்கள் எங்களுக்கு கிடைத்தனர். படத்தை இயக்க வேண்டும் என்கிற டென்ஷன் இருந்தது. ஆனால் நடிகர்கள் அனைவரும் மிகவும் நன்றாக நடித்தனர். நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். சிறுவயதில் இருந்தே வீட்டில் நான் செல்லப்பிள்ளை. பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். ‘நான் ஹீரோ மாதிரி இருக்கிறேன்’ என்று நண்பர்கள் சொன்னார்கள். சில அவமானங்களும் நேர்ந்தன. அதனால்தான் நடிகனாக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ரஜினி சாரோடு நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். அவரோடு நிறைய பழகியிருக்கிறேன். இன்றைய தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு அண்ணனாக, சீனியராக எனக்கு அவர் நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவற்றை நான் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன். 'ஜெயிலர்' படம் பார்த்தேன். அவருடைய வேகம் இப்போதும் அப்படியே இருக்கிறது. எப்போதும் சூப்பர் ஸ்டார் அவர்தான். அவர் போல் யாராலும் வாழ முடியாது.
குப்பன் படத்தை இயக்கும்போது நடிகர்களை தினமும் ஊக்குவித்து வேலை வாங்கினேன். இப்போது வந்திருக்கும் இளம் இயக்குநர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருக்கிறது. ஒரே மாதிரி கேரக்டர்களாக வந்ததால் தமிழில் நிறைய படங்களை நான் மிஸ் செய்திருக்கிறேன். இப்போது விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' படத்தில் முக்கியமான ஒரு ரோல் செய்திருக்கிறேன். அருண்ராஜா காமராஜ் படத்தில் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது. நம்முடைய கேரக்டரை நாம் விரும்ப வேண்டும். அதுதான் முக்கியம். கதை தான் எப்போதுமே ஹீரோ.