கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.
பின்பு முரளி கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அபிர்சந்த் நஹாவர். இந்த வழக்கை விசாரித்த அல்சூர் கேட் போலீஸார் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196 (போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது), 420 (மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது), 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் மீதான 463 பிரிவு குறித்து கீழமைநீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில் லதா ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மற்றும் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்ய கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.