Skip to main content

“மனித வடிவிலான கடவுள்” - கிச்சா சுதீப் உருக்கம் 

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
kicha s ydeep about her mother

கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். தமிழில் ‘நான் ஈ’ படம் மூலம் பிரபலமானார். இப்போது சேரன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அங்கு தொகுத்து வழங்குகிறார். இப்போது நடந்து வரும் சீசனுடன் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கிச்சா சுதீப்பின் தாயார் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். இதனால் கிச்சா சுதீப்புக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் கிச்சாச் சுதீப் தனது தாயார் குறித்து உருக்கமாக ஒரு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “என் தாயார் மிகவும் பாரபட்சமற்றவர், அன்பானவர், மன்னிக்கக்கூடியவர், அக்கறை காட்டுபவர். என் வாழ்வு மதிப்பு மிக்கவர், கொண்டாடக்கூடியவர், போற்றப்படக்கூடியவர். மதிப்பிற்குறியவ - ஏனென்றால் மனித வடிவிலான கடவுள் அவர். கொண்டாடக்கூடியவர் - ஏனென்றால் அவர் என் கொண்டாட்டங்களுக்கானவர். என்னுடைய ஆசிரியர், என் நலம் விரும்பி,  என்னுடைய முதல் ரசிகை. என்னுடைய மோசமான படங்களையும் விரும்பக்கூடியவர். போற்றப்படக்கூடியவர் -  இன்று அவர் அழகான நினைவுகளாக மாறியிருக்கிறார்.

என்னுடைய வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை. வெற்றிடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லது என்ன நடந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 24 மணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. தினமும் காலை, 5.30 மணியளவில், ‘குட் மார்னிங் காந்தா’ என்ற மெசேஜ் வரும். அக்டோபர் 18, வெள்ளிக்கிழமையன்று தான் நான் அவருக்கு கடைசியாக மெசேஜ் அனுப்பினேன். அடுத்த நாள் நான் பிக் பாஸீல் இருந்து எழுந்தபோது அம்மாவின் மெசேஜ் வரவில்லை. இத்தனை வருடங்களில் எனக்கு என் அம்மாவிடமிருந்து மெசேஜ் வராமல் இருந்தது இதுவே முதன் முறை. சரி என நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி விசாரித்தேன். பிக்பாஸ் தொடர்பான சனிக்கிழமை எபிசோடுக்காக பேசிக் கொண்டிருந்தோம். அதனால் நேரம் போனதே தெரியவில்லை. நான் பிக்பாஸ் ஸ்டேஜுக்கு செல்வதற்கு முன் என் அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது. 

உடனே மருத்துவமனையில் இருக்கும் என் சகோதரியிடமும், மருத்துவரிடமும் பேசிவிட்டு பிக்பாஸ் மேடைக்குச் சென்றேன். சிறிது நேரம் கழித்து நான் மேடையில் இருக்கும் போது, தாயார் சீரியஸாக இருக்கிறார் என்ற தகவல் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு சொல்லபட்டது. என் வாழ்க்கையில் முதன் முறையாக உதவியற்ற ஒரு சூழலை நான் எதிர்கொள்கிறேன். இங்கே சனிக்கிழமை பிக்பாஸ் எபிசோடில் சில பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன், மறுபுறம் என் மனதில் அம்மாவின் உடல்நலம் குறித்த சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்றுக்கொண்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதை என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்ததற்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன். எபிஸோடை முடித்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றேன். அம்மா வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். என் அம்மா சுய நினைவில் இருக்கும்போது என்னால் அவரை பார்க்க முடியவில்லை. சில மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை. என் வாழ்வின் விலைமதிக்க முடியாத ஒன்று என்னை விட்டு சென்றுவிட்டது” என்றார்.

சார்ந்த செய்திகள்