பிரபல இசையமைப்பாளரின் ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார். இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தை 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரித்திருக்க எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஹலிதா ஷமீம், கதீஜா ரஹ்மான் மற்றும் மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், கதீஜா ரஹ்மான் பேசுகையில், “இது எப்படி நடந்து முடிந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை, ஹலிதா ஷமீம் இந்த படத்தில் இசையமைக்க என்னை 2022ஆம் ஆண்டே சந்தித்தார். அப்போது நான் அதற்கு தயாராக இல்லை. அதன் பிறகு இந்த படம் முடிந்து வெளியாகிருக்கும் என நினைத்தேன். ஆனால், வெளியாகவில்லை. பின்பு நான் அவரை சந்தித்தேன். அப்போது அவர் கிட்டத்தட்ட வேற இசையமைப்பாளரிடமே சென்றுவிட்டார். பிறகு அவரே வந்து, என்னிடம் படத்திற்கு தேவையானதை இசையமைத்து கொடுங்கள், இந்த படத்திற்கு என்னுடன்தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஒரு குழந்தை , அடல்ட் மனப் பக்குவத்திற்கு வருவதை போல என்னை பக்குவபடுத்தினார். “படத்தில் இருக்கேன்னு மட்டும் சொல்லுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன்” எனச் சொன்னார். என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தது, எனக்கு வேலை செய்யவும் இலகுவாக அமைந்தது.
முதலில் டிரெய்லர் கட் தான் கொடுத்தார்கள். அப்போது என்னால் பண்ண முடியாது என முடிவெடுத்து, என் கணவரிடமும் அதைப் பற்றி பேசினேன். முதலிலேயே டிரெய்லர் கொடுத்ததும் நான் பயந்துவிட்டேன், அதன் பின் இயக்குநர் என்னிடம் தயவு செய்து விட்டுவிடாதே ப்ளீஸ். கொஞ்சம் நேரம் எடுத்துகொள் என்றார். தொடர்ந்து என்னுடைய ஸ்டூடியோவில் இருக்கும் நண்பர்கள் “நீ எடுத்து செய் என்றனர்”. நான் பண்ணுகிறேன். ஆனால், எனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். அப்போதுதான் ஒழுங்காக பண்ண முடியும் என்று சொன்னேன், இயக்குநரும் அதற்கு ஒத்துழைத்தார். ஏதாவது ஒன்று என்றால் அவருடன் கலந்துரையாடுவேன். அப்படி என்ன என்னிடம் நீங்கள் பார்த்தீர்கள்? என 8 மாதங்கள் அவரை படுத்தி எடுத்துவிட்டேன். உனக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ அதை செய் அதுதான் படத்திற்கு வேண்டும் என்றார்.
சில நேரம் டியூன்ஸ் லாக் ஆகிவிடும். ஏன் லாக் பண்ணீங்க? எப்படி பண்ணீங்க? நிஜமாகவே பிடித்துள்ளதா? என்ற போராட்ட எண்ணங்கள் எனக்குள் இருந்தது. நான் வேலை செய்த எல்லா டியூன்ஸையும் என் கணவரிடமும், என் சகோதிரிடமும் தான் காண்பிப்பேன். எப்படி அப்ரூவ் பண்றாங்க உங்களுக்கு அதெல்லாம் பிடித்துள்ளதா? என்று கேட்பேன். அதற்கு என் கணவர் “நல்லாதான் இருக்கு ஏன் இவ்ளோ யோசிக்குறனு?” சொல்லுவார். எல்லாவற்றையும் அவரிடம் அனுப்பி உங்களுக்கு ஏதாவது தோன்றினால் சொல்லிடுங்க என்பேன். இப்படி என்னுடைய டீம் மட்டுமின்றி எல்லோரும் என்னை சப்போர்ட் செய்தார்கள்.
இந்த படத்தில் நான்தான் இசையமைப்பாளரார் என்று அறிவிப்பு வெளியான போது நிறைய திறமையுள்ள பலர் இருக்கும் வேளையில் என்னை ஏன் தேர்வு செய்தார்கள்? என பலரும் கேள்விகள் எழுப்பினார்கள். அது மிகவும் எனக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது என்னுடைய இயக்குநருக்கு நான் பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்று யோசித்தேன். ஏனென்றால் அவர் என்னை முழுமையாக நம்பினார். அதே நேரத்தில் ஆல்பம் ரெடி பண்ணுங்க என இயக்குநர் சொன்னதும், எனக்கு என் மேலேயே முதலில் சந்தேகம் இருந்தது. அதன் பின்பு ஆல்பமும் ரெடி ஆனது. உங்களுக்கும் பிடித்தால் சப்போர்ட் பண்ணுங்க, இல்லையென்றால் விமர்சனம் செய்யுங்கள். தயவுசெய்து இணையத்தில் அதிகமாக திட்டாதீங்க” என்றார்.