கே.ஜி.எஃப் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. கன்னட சினிமாவில் இதுவே பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. தமிழகத்தில் அப்போது இப்படத்துடன் சேர்த்து ஏழு படங்கள் வெளியாகின. அதனால் இந்தப் படத்திற்கு சரியான புரோமோஷன் அளித்தும், படத்திற்குரிய வரவேற்பு கிடைக்கவே இல்லை. ஹிந்தியில் அப்போது ஷாரூக் கான் படமான ஜீரோ வெளியானது. அந்தப் படத்துடனேயே போட்டிபோட்டு அங்கு ஹிட்டான இந்தப் படத்தால் தமிழகத்தில் சுமாராகவே வரவேற்கப்பட்டது. இந்தப் படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிட்டவர் நடிகர் விஷால்தான். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைத்துவிடும் என்று நம்பினாரா என தெரியவில்லை. உண்மையில் கே.ஜி.எஃப் படத்திற்கு கேட்கப்பட்டது 400 திரையரங்குகள் கிடைத்ததோ 100 திரையரங்குகள்தான்.
தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொன்னது ஒரே விஷயம்தான், ’படத்தின் மேக்கிங் வேற லெவல், ஆனால் படத்தில் ஹீரோவுக்கு ஓவர் பில்டப்பாக இருக்கிறது. படம் முழுவதுமே பில்டப்பாக இருக்கிறது’ என்றார்கள். சிலர் இந்தப் படத்தை பாகுபலியுடன் ஒப்பிடவும் செய்தார்கள். இந்தப் படம் வெளியானபோது தமிழில் வசனங்கள் அனைத்தும், கத்தியை கூர்மையாக தீட்டியதுபோல இருந்தன. நிறைய பஞ்ச் டயலாக்குகள் படத்தில் இருந்தாலும், அனைத்துமே ரசிக்கும் படியாகவே இருந்தன. குறிப்பாக ‘நான் பத்து பேர அடிச்சு டான் ஆனவன் இல்ல, நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்’, ‘கேங்க கூட்டி வர்றவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்’, பின்னர் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். குறிப்பாக ’உன் பின்னாடி ஆயிரம் பேர் இருக்கிற தைரியம் இருந்தா உன்னால் ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும், அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்கிற தைரியம் இருந்தா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்’ என்கிற வசனம் எல்லாம் வேற லெவல் மோடிவ்.
இந்தப் படத்தில் மாஸ் மட்டும் இல்லாமல், அம்மா செண்டிமெண்ட், சின்ன காதல் என ஒரு கரெக்ட்டான மசாலா படமாகவே இருந்தது. பாலிவுட்டில் 1500 திரையரங்குகளில் வெளியாகி பல நாட்கள் ஹவுஸ் புல்லாக ஓடியது இத்திரைப்படம். கர்நாடகாவில் மட்டும் 150 கோடிக்குமேல் சம்பாதித்திருந்தது. மொத்தமாக இந்த திரைப்படம் இந்தியா முழுவதுமாக சேர்த்து 200 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தப் படத்திற்கு உரிய வரவேற்பு கிடைத்திருந்தால் இன்னும் நிறையவே படம் சம்பாதித்திருக்கும் என்று சொல்லப்பட்டது.
இப்படி தமிழில் அமைதியாக வந்து சென்ற கே.ஜி.எஃப், திடீரென சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதில் வரும் வசனங்கள் மீம்ஸாகவும், அதில் வரும் ‘தந்தானே நானே நா’ தீம் மியூஸிக் பலரின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாகவும் வலம் வந்தன. என்ன காரணமென்று ஆராய்ந்தால் இரண்டு விசயங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று, இந்தப் படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. இன்னொன்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. இரண்டில் எது முக்கிய காரணமென்று தெரியவில்லை, சமூக வலைதளங்களில் அனைவரும் இந்த படத்தின் செண்டிமெண்ட், ரொமான்ஸ், மோடிவேஷன் வசனம் என்று பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த வீடியோக்களை கலாய்த்து மீம்களும் போடுகின்றனர்.
படத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் ஹீரோ தன்னுடைய வறுமையை பன்னுடன் ஒப்பிட்டு சொல்லும் வசனத்தைக் கொண்டும் மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற ரீச் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டும், இரண்டாம் பாகத்தையும் தற்போது வெளியிட்டதுபோல் சரியான மேக்கிங்கில் வெளியிட்டார்கள் என்றால் இப்படம் கண்டிப்பாக பெரிய வசூலையும் தொடும், மக்களிடையே இன்னுமொரு பாகுபலியாய் மனதில் நிற்கும் என்று சொல்லலாம்.