என்.ஜி.கே படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாக உள்ள படம் காப்பான். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. முதலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சாஹோ படக்குழுவின் வேண்டுகோளுக்காக செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படம் கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் வெளியாகிறது.

கேரளாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், அஜித் உள்ளிட்டவர்களின் படம் வெளியாகி நல்ல வசூல் பார்க்கின்றனர். இதில் அதிக மவுசு விஜய்க்குதான்.
சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தை அடுத்த மாதம் 20-ந்தேதி கேரளாவில் 200 திரையரங்குகளில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை கேரளாவில் வினியோகம் செய்த டோமிசன் முளகுபாடம் என்பவர் காப்பான் படத்துக்கு எதிராக கேரள வினியோகஸ்தர் சங்கத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் “கேரளாவில் 2.0 படத்தை திரையிட்டதில் தனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட காப்பான் படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த உரிமையை கொடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த கேரள வினியோகஸ்தர் சங்கம் டோமிசனுக்கு வினியோக உரிமையை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளதாகவும் அதை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காப்பான் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.