தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா இயக்கத்தில் கடைசியாக உருவான ‘வர்மா’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு ஓடிடியில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. இப்படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவின. சூர்யா, அதர்வா, ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின் எனப் பல நடிகர்களிடம் பாலா கதை சொல்லியுள்ளதால், அடுத்ததாக யாரை கதாநாயகனாக வைத்து பாலா படம் இயக்கப்போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பும் நிலவியது.
இந்த நிலையில், நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து அடுத்த படத்தை பாலா இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.