விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. அட்லீ இயக்கியிருந்த இப்படத்தை தாணு தயாரித்திருந்த நிலையில் ஜி.வி பிரகாஷ் பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அதே ஆண்டு இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் ஷாருக்கான், ரோஹித் ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு கைவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இப்படத்தில் வருண் தவான் நடிப்பதாக தற்போது வரை தகவல் இருந்து கொண்டே வருகிறது. அண்மையில் அட்லீ தயாரிப்பில் ‘கீ’ படத்தை இயக்கிய காளீஸ் இயக்கத்தில் வருண் தவான் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமந்தா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்புத் தொடங்கவுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் சிரஞ்சீவியின் 'போலா சங்கர்', தமிழில் ஜெயம் ரவியின் 'சைரன்', 'ரகு தாத்தா', 'கண்ணிவெடி' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீ, ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் மூலமாக பாலிவுட்டில் கால் பதிக்கிறார் நயன்தாரா. இப்படம் வருகிற செப்டம்பர் 7 வெளியாகிறது. நயன்தாராவைத் தொடர்ந்து அட்லீ படத்தால் கீர்த்தி சுரேஷும் பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளதாக தெரிகிறது.