'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘ரெயிலின் ஒலிகள்...’, ‘அரக்கோணம்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கீர்த்தி பாண்டியன், “பா. ரஞ்சித் அண்ணாவின் பெயர் இடம் பெற்றாலே, அரசியல் பற்றி பேச ஆரம்பிச்சிட்டீங்களா..., அப்படி தான் கமெண்ட்ஸ் வருகிறது. அப்படி பேசினால் என்ன தப்பு. நம்ம போட்டிருக்கிற துணியிலிருந்து குடிக்கிற தண்ணீர் வரை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கு. அது பேசவில்லை என்றால், அது இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்க அதை தவிர்க்கிறீங்க என்றுதான் அர்த்தம். அதனால் இந்த படத்திலும் அரசியல் இருக்கு. நாம் எடுக்கிற எல்லா படத்திலும் அரசியல் இருக்கு. ரஞ்சித் அண்ணா, அவர் தயாரிக்கிற, இயக்குகிற எல்லா படத்திலும், அவர் சொல்லுகிற விஷயம் ரொம்ப முக்கியம். அந்த விதத்தில் இந்த படத்தில் நடித்திருப்பதை ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.
இன்றைக்கு இந்த நாளில், இந்த விழா நடப்பது ரொம்ப முக்கியமானது. தெருக்குரல் அறிவு வரிகளில் இந்த படத்தில் ‘அரக்கோணம் ஸ்டைல்...’ பாடலில் வரும், ‘காலு மேல கால போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே” என்ற வரிகளை வாசித்து உரையை முடித்தார்.