விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கக் கோரி பலரும் கூறி வந்தனர்.
அந்த வகையில் மேற்கு வங்கத்திலும் எதிர்ப்பு வந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடத் தடை விதிப்பதாக நேற்று அறிவித்தார். வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒரு பிரிவினரை அவமானப்படுத்தியது. தி கேரளா ஸ்டோரி படம் திரிக்கப்பட்ட ஒரு கதை என்று கூறியிருந்தார்.
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எங்களையும் எங்களின் படங்களையும் அவதூறு செய்யும் வகையில் தவறான மற்றும் மிகவும் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக இந்த சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றுள்ளார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் தி கேரளா ஸ்டோரி போன்று பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. கடந்த ஆண்டு நடந்த 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்ட போது, "இப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மிகவும் கெளரவமான இதுபோன்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது" என அவ்விருதின் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
BREAKING:
I have, alongwith @AbhishekOfficl & Pallavi Joshi, sent a LEGAL NOTICE to the Chief Minister, Bengal @MamataOfficial for her false & highly defamatory statements made with malafide intention to defame us & our films #TheKashmirFiles & upcoming 2024 film #TheDelhiFiles. pic.twitter.com/G2SjX67UOB— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 9, 2023