ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் “ட்ரிபிள்ஸ்” தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் ஊடகம், பத்திரிக்கை மற்றும் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினர். அப்போது அந்த கலந்துரையாடலில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது...
"முதன் முதலில் நண்பர் கல்யாண் தான் பாலாஜி எழுதியிருந்த திரைக்கதையின் சுவாரஸ்யங்கள் பற்றி கூறினார். நாம் அனைவரும் நகைச்சுவை மேதை கிரேஸி மோகன் அவர்களின் மிகப்பெரும் ரசிகர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பாலாஜியின் திரைக்கதையில் அவரின் சாயல் அட்டகாசமாக விரவியிருந்தது. நாங்கள் அனைவரும் கிரேஸி மோகன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் “ட்ரிபிள்ஸ்” இணையதொடரை அவருக்கு சமர்ப்பிக்கிறோம். ஆரம்பகட்ட கருவே அட்டகாசமானதாக இருந்ததால் உடனடியாக இதன் படப்பிடிப்பு பணிகளை துவக்கினோம். பட உருவாக்கத்தின் போது படக்குழு அனைவரிடமும் நேர்மறை தன்மையுடன் பெரும் உற்சாகம் பரவியிருந்தது. இப்போது இறுதி வடிவத்தை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரில் நிறைய காமெடியும் அழகான ரொமான்ஸும் உள்ளது. நடிகர் ஜெய் முதல் வாணி போஜன், மாதுரி, ராஜ்குமார், விவேக் பிரசன்னா மற்றும் வெங்கடேஷ் அவர்கள் என அனைவரும் அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். “ட்ரிபிள்ஸ்” தொடர் ஒரு அட்டகாசமான பொழுதுபோக்கு சித்திரமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட பொருத்தமான கமர்ஷியல் தொடராக இருக்கும். நாங்கள் பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். ஆனால் இயக்குநர் சாருவின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் படு சுவாரஸ்யமாக இருந்தது. “ட்ரிபிள்ஸ்” தொடர் ரசிகர்களுக்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பெரு விருந்தாக இருக்கும்" என்றார்.