முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழுவினரின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில், “வெற்றி அடிக்கடி கிடைப்பதில்லை. கிடைக்கும்போதே நன்றாக கொண்டாடிக்கொள்ள வேண்டும். வெற்றிதான் நமக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. விருமனின் வெற்றி ஒரு குடும்பத்தின் வெற்றி. 60 நாட்கள் தேனியில் தங்கியிருந்து ஷூட் செய்தோம். ஒவ்வொரு நாள் கதை சொல்லும்போதும் இயக்குநர் முத்தையா கண்ணீரோடே கதை சொல்வார். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது ரொம்பவும் முக்கியம். ஒன்றாக வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல. அனைவரும் ஒன்றாக வாழ சகிப்புத்தன்மை ரொம்பவும் தேவைப்படுகிறது. நம்மைவிட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும்போதுதான் அது சாத்தியமாகிறது. அதை முத்தையா சார் படங்கள் மூலம் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். என்னுடைய குழந்தைக்கு இந்தப் படம் பெரிய பாடமாக இருக்கிறது என்று படம் பார்த்த சிலர் சொன்னபோது ரொம்பவும் சந்தோசமாக இருந்தது.
இந்தப் படம் கிராமத்தில்தான் ஓடும். சிட்டியில் பெரிய அளவில் ஓடாது என்றார்கள். ஆனால், இன்றைக்கு சிட்டியிலேயே டிக்கெட் கிடைக்கவில்லை. லாக்டவுனில் நம் மக்கள் ஓடிடியில் நிறைய வெளிநாட்டு படம் பார்த்து அவர்கள் ரசனையே மாறிவிட்டதே, இனி வில்லேஜ் சப்ஜெக்ட் படம் ஓடுமா என்று யோசித்தேன். ஆனால், யாரும் மாறவில்லை. நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் என்றும் மாறாது என்பதற்கு விருமனின் வெற்றி மிகப்பெரிய சாட்சி” எனத் தெரிவித்தார்.