கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் இன்றைய தேதியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு சமுதாயத்திலும் கண்தானம், இலவச பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வந்தார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக மைசூர் பல்கலைக்கழகம் புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னதாக அறிவித்திருந்தார். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கி அம்மாநில அரசு கௌரவப்படுத்தவுள்ளது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழா கர்நாடக சட்டசபையான விதான சவுதாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விருதினை வழங்குவதற்காக ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
புனித் ராஜ்குமார் மறைந்து இன்றுடன் (29.10.2022) ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் கடைசியாக நடித்த 'கந்தாட குடி' படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் காடு மற்றும் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இயற்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாகும். மேலும் இப்படம் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிறைந்த ஒரு ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.