சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படம் 'கண்ணே கலைமானே'. யுவன் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இதற்கு முன்பு சீனுராமசாமி இயக்கத்தில் யுவன் - வைரமுத்து கூட்டணியில் உருவான 'எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று' பாடல் சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருதைப் பெற்றது. மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் பாடல்கள் மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று 'கண்ணே கலைமானே' படத்தின் முதல் பாடல் யூ-ட்யூபில் வெளியானது. இந்தப் பாடல் ஒரு மெலடியாக, வரிகளுக்கு வழிவிட்டு அழகிய இசையோடு அமைந்துள்ளது. 'எந்தன் கண்களை காணோம்... அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா' என தொடங்குகிறது இந்தப் பாடல்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மௌனம் பேசியதே, ராம், கற்றது தமிழ், பையா, நான் மகான் அல்ல உள்பட பல படங்களில் அந்த காலகட்டம் யுவனின் பொற்காலமாக இருந்தது. யுவன் இசைக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. பின்னர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில்தான் யுவன் அவரது பழைய ஃபார்முக்கு வந்துள்ளதாக அவரது ரசிகர்கள் உணர்கின்றனர். யுவன் 2.0வின் இசையில் இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடலில் உதயநிதி - தமன்னா தோன்றுகின்றனர்.
அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ படத்தை இயக்குகிறார் சீனுராமசாமி. அந்தப் படத்துக்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரையும் இணைந்து இசையமைக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் சீனு. அந்தப் படத்துக்கு பாடல்கள் எழுத வைரமுத்துவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படி இந்த முயற்சி நடந்தால், இளையராஜா, வைரமுத்து எனும் இரு பெரும் படைப்பாளிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படமாக அது இருக்கும். அந்த அதிசயத்தை சீனுராமசாமி நிகழ்த்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.