கன்னட திரையுலகில் ‘ஆ தினகலு’, 'பிருகாளி', 'ரணம்' எனப் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் சேத்தன் குமார். நடிகராக மட்டுமில்லாமல் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள சில பதிவுகள் சர்ச்சையாகி அதன் காரணமாக அவர் கைதும் ஆகியுள்ளார். முன்னதாக ஹிஜாப் வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித்துக்கு எதிராக ட்வீட் செய்திருந்தார். இதற்காக கடந்த வருடம் பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளி வந்தார்.
பின்பு காந்தாரா திரைப்படத்தைப் பற்றி "பழங்குடியினரின் கலாச்சாரம் பிராமணியத்துடன் கலந்தது" என கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்த படத்தை இழிவு படுத்தும் வகையில் அவர் கருத்துகள் இருப்பதாக கடந்த வருடம் அக்டோபரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் இந்துத்துவா குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்துத்துவா கொள்கை பொய்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாவர்க்கர், ராமர் ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பியபோது இந்திய 'தேசம்' தொடங்கியதாக கூறியது பொய். 1992: பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என கூறியதும் பொய். 2023: உரிகவுடா-நஞ்சேகவுடா ஆகியோர் திப்புவை கொன்ற கொலையாளிகள் என சொன்னதும் பொய். இந்துத்துவாவை உண்மையால் மட்டுமே தோற்கடிக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு இந்து ஆதரவு அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மத உணர்வை புண்படுத்தியதாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பெங்களூரு ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் அவரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.