விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'வாரசுடு' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் "தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது. எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் இந்த அறிக்கை தொடர்பாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி மற்றும் பேரரசு உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக தங்களது கருத்தைப் பகிர்ந்திருந்தார்கள். இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் கஞ்சா கருப்பு தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "சபரி ஐயப்பா படத்திற்காக டப்பிங் பணியில் இருக்கிறேன். நான் தெரியாமத்தான் கேக்குறேன். சபரி ஐயப்பன் படம் வெற்றி பெற்றால் தெலுங்கிற்கு கேட்டால் கொடுக்க மாட்டோமா... வெற்றி பெற்றால் கொடுக்கத்தான் செய்வோம். நீங்க ஏன் தியேட்டர் இல்ல அது இல்லை என்று சொல்கிறீர்கள். உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு.
உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓடக் கூடாதா. தமிழர்களைத் தமிழர்களாக மதியுங்கள். ஆந்திரா மக்களுக்கு ஒன்று நான் சொல்கிறேன். விஜய்யின் வாரிசு படத்தை அங்கே திரையிடுங்கள். அப்படிச் செய்தால்தான் எங்களுக்குப் பெருமை. இல்லைன்னா அது எங்களுக்குப் பெருமை கிடையாது. வறுமை என நாங்க சொல்லிட்டு போய்டுவோம்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.