இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இப்போது 'எமர்ஜென்சி' என்ற தலைப்பில் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைப் படமாக இயக்கியும் நடித்தும் வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தில் அறிமுகமானார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அண்மையில் தனது காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாகக் கூறி கங்கனா படக்குழுவிடம் இருந்து விடைபெற்றார்.
இந்த நிலையில் இன்று (23.03.2023) தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அனைவருக்கும் நன்றி கூறும் விதமாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “எனது தாய் மற்றும் தந்தையின் ஆதரவிற்கு நன்றி. மேலும் என் ஆன்மீக குருவான சத்குரு மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் போதனைகளுக்கு நன்றி. என் எதிரிகள் என்னை ஓய்வெடுக்க விடாமல் செய்கிறார்கள். நான் எவ்வளவு வெற்றி பெற்றாலும், அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. அவர்கள் எனக்கு எப்படி போராட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். எனது சித்தாந்தம் மிகவும் எளிமையானது. என் எண்ணங்களும் எளிமையானவை. நான் எப்போதும் அனைவருக்கும் நல்லதையே விரும்புகிறேன். எனவே, நாட்டின் நலன் குறித்து நான் கூறியது யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகையாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனை குறித்தும் அரசியலை விமர்சனம் செய்தும் தைரியமாக தன் கருத்துக்களை முன்வைப்பவர் கங்கனா ரணாவத். இவர் கூறிய பல கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.