பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். மேலும், தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு வரும் கங்கனா தொடர்ந்து மத்திய அரசுக்கும் மோடிக்கும் ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், மதம் குறித்து ராஜமௌலி கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கனா. சமீபத்தில் ராஜமௌலி தி நியூயார்கர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் மதத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்வதால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் கடவுளைப் பற்றி தவறாகப் பேசுவதில்லை. நான் அதைச் செய்வதில்லை. நான் மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஏனென்றால், நிறைய பேர் கடவுளைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனாலும், எனக்கு மதச்சடங்குகளிலோ, அப்படிப்பட்ட விஷயங்களிலோ நம்பிக்கை இல்லை.
நாங்கள் ஒரு பெரிய குடும்பம். அதில் என் தந்தை, அம்மா உள்ளிட்ட அனைவரும் ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், நான் சிறுவயதில் இந்து கடவுள்களைப் பற்றிய கதைகளைப் படித்த பிறகு எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது உண்மையாகத் தெரியவில்லை. பின்னர் எனது குடும்பத்தின் மதநம்பிக்கையில் சிக்கிக்கொண்டேன். நான் மதநூல்களைப் படிக்க ஆரம்பித்தேன், புனித யாத்திரைகள் செல்ல ஆரம்பித்தேன், காவித் துணி அணிந்து சில வருடங்கள் சன்னியாசியாக வாழ ஆரம்பித்தேன். சில நண்பர்களுக்கு நன்றி, பின்னர் நான் கிறிஸ்துவத்தைப் பிடித்தேன். நான் பைபிளைப் படிப்பேன், சர்ச்சுக்குப் போவேன், எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன். படிப்படியாக இந்த விஷயங்கள் அனைத்தும் மத அடிப்படையில் ஒரு வகையான சுரண்டல் என்பதை எனக்கு உணர்த்தியது.
எனது உறவினர் ஒருவரின் கீழ் சில மாதங்கள் பணிபுரிந்தேன். அவர் எனக்கு அய்ன் ராண்டின் தி ஃபவுண்டன்ஹெட் மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நான் அந்த நாவல்களைப் படித்தேன். அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அவர்களுடைய தத்துவம் எனக்குப் புரியவில்லை. ஆனால், அதன் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன். அந்தச் சமயத்தில்தான் நான் மெல்ல மெல்ல மதத்தை விட்டு விலக ஆரம்பித்தேன். அந்தக் காலத்திலும் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகள் மீதான என் காதல் குறையவே இல்லை. நான் அந்த நூல்களின் மத அம்சங்களிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால், என்னுடன் தங்கியிருப்பது அவற்றின் நாடகம் மற்றும் கதைசொல்லலின் சிக்கலான தன்மையும் மகத்துவமும்தான்" என்றார்.
ராஜமௌலியின் கருத்துக்கு கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளதாவது, "மிகைப்படுத்தத் தேவையில்லை. எல்லா இடங்களிலும் காவிக்கொடியை எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. நம் செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாகப் பேசுகின்றன. ஒரு பெருமைமிக்க இந்துவாக இருப்பதால் எல்லாவிதமான தாக்குதல்கள், விரோதம், கிண்டல் மற்றும் அதிக அளவு எதிர்மறை உணர்வுகளை எதிர்கொள்கிறோம். நாங்கள் அனைவருக்கும் திரைப்படங்களை உருவாக்குகிறோம். கலைஞர்களான நாங்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
வலதுசாரிகள் என்று அழைக்கப்படுபவர்களிடம் இருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைக்காததால், நாங்கள் முற்றிலும் சுயமாக இருக்கிறோம். எனவே ராஜமௌலி சாருக்கு எதிராக விமர்சனம் வந்தால் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர் ஒரு மேதை. அவரைப் பெற்ற நாம் பாக்கியவான்கள். இப்படி சொல்வதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. நான் இதுவரை ராஜமௌலி சாரை சந்தித்துப் பேசியது இல்லை. இந்த எதிர்மறை விமர்சனங்களால் அவர் துவண்டுவிடமாட்டார் என நினைக்கிறேன். உலகம் எதற்காக அவர் மீது சர்ச்சைக்குரிய முத்திரை பதித்துள்ளது? என்ன சர்ச்சை செய்தார்? தொலைந்து போன நமது நாகரீகத்தை பெருமைப்படுத்த பாகுபலி என்ற படத்தை எடுத்தார் அல்லது ஆர்.ஆர்.ஆர் படத்தை உருவாக்கினார்? அல்லது சர்வதேச சிவப்பு கம்பளங்களுக்கு அவர் வேட்டி அணிந்தாரா? அவர் என்ன சர்ச்சை செய்தார்? தயவு செய்து சொல்லுங்கள்" எனக் கோபமாகப் பதிவிட்டுள்ளார்.