Skip to main content

"அதற்காக சிறு குழந்தைபோல ஆவலுடன் காத்திருக்கிறேன்..." நடிகை கங்கனா ரணாவத் பேச்சு!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Kangana Ranaut

 

இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி திரைப்படம் உருவாக்கியுள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதை அடுத்து, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ‘தலைவி’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்திற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கவனம் செலுத்திவருகிறது.

 

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி, ஏ.எல். விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும், திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கங்கனா ரணாவத், "இப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்துள்ளோம். இப்படத்தைப் பல தடைகளைக் கடந்து திரையரங்கிற்கு கொண்டுவந்துள்ளோம். அரவிந்த் சாமி, மதுபாலா மேடம் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தது எனக்குப் பெருமையளிக்கிறது. மதுபாலா மேடம் என்மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள். அரவிந்த் சாமி மூலம் ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய கதைகளைக் கேட்டறிந்தேன். சமுத்திரக்கனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சிறு குழந்தைபோல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்கள் எந்த நிலையிலும் எவ்வித சமரசமும் இல்லாமல் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை தந்த விஜய்க்கு நன்றி" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்