இந்தியாவில் நிலவும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கலாம் எனப் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதிக மக்கள்தொகை காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 130 கோடி என்பது நமது அதிகாரப்பூர்வ மக்கள்தொகை. இத்தோடு சட்ட விரோதமாகக் குடியேறிய 25 கோடி மக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு மூன்றாம் உலக நாடு. ஆனால், சிறந்த தலைமையின் கீழ் தடுப்பூசி உருவாக்கத்தில் மற்றும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறோம். அதேநேரத்தில் நாம் பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் 32 கோடி மக்கள். ஆனால், இந்தியாவைவிட 3 மடங்கு நிலமும் வளமும் உள்ளன. சீனாவில் இந்தியாவுக்கு ஈடான மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், அங்கும் நிலமும் வளமும் மூன்று மடங்கு அதிகம். இங்கு மக்கள்தொகை பிரச்சினை மிக மோசமாக இருந்ததால்தான் இந்திரா காந்தி கட்டாயமாக பல லட்சம் மக்களுக்குக் கருத்தடை செய்தார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த தேசத்தை எப்படிக் கையாள்வது சொல்லுங்கள்? மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். போதும் இந்த ஓட்டு அரசியல். இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்ததால் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றதும், பிறகு கொல்லப்பட்டதும் உண்மை. ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது, மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் குறைந்தபட்சம் அபராதமோ, சிறைத் தண்டனையோ விதிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நெட்டிசன்கள், நடிகை கங்கனா ரணாவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.