பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கங்கனா ரணாவத் நாடாளுமன்ற வளாகத்திற்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி நாடாளுமன்ற செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட சில காட்சியை நாடாளுமன்றத்தில் எடுக்கத் திட்டமிட்டு இந்தக் கடிதத்தை கங்கனா ரணாவத் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தவோ வீடியோ எடுக்கவோ தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
ஆனால் அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்றும் சன்சாத் டிவி பொதுவாக பார்லிமென்ட் நிகழ்வுகளைப் படமாக்க அனுமதிக்கப்படுவதாக கங்கனா ரணாவத் தரப்பு மேற்கோள் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனியார் பணிகளுக்காக நாடாளுமன்றத்திற்குள் படப்பிடிப்பு நடத்த இதற்கு முன் யாருக்கும் அனுமதி வழங்கியதில்லை. அதனால் கங்கனா ரணாவத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.