2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நிலையில் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது, “எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றிருந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் என கங்கனா கூறியிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி கங்கனாவை ஆதரித்து பா.ஜ.கவினரும் எதிராக காங்கிரஸை சார்ந்தவர்களும் மாறி மாறி கருத்து பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை பகிர்ந்துள்ளார் கங்கனா. அந்த செய்தி குறிப்பில், “நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர், அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற அரசை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பிரதமர், மாநிலத் தலைவர் மற்றும் போர் அமைச்சராக அறிவித்தார்.
மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன். இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான ராணி ஜான்சி படைப்பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர் படைப்பிரிவு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.