கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக இருக்கும் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் சமீபத்தில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த நிலையில் தற்போது ஹிந்தி முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு, தென்னிந்தியாவின் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பான ஃபெப்சிக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், 'தலைவி' படத்தில் வேலை செய்யும் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியும் வழங்கியுள்ளார். வேலையில்லாமல் கஷ்டப்படும் ஃபெப்சியின் தினக்கூலிப் பணியாளர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் ஆவார். மேலும் கங்கனா ரனாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.