இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் அவருடைய திட்டங்களில் ஒன்றான ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ என்ற திட்டத்தை தெரிவித்திருந்தார்.
இதில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம் குறித்து கமல் பேசும்போது, "பெண் சக்தி திட்டம், பலமுறை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றுதான். ஆனால், அதைக் கிண்டலடிக்கும் போக்கு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் ‘பெய்ஜிங் அறிவிப்பு’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பெண் சக்தி’ என்கிற திட்டம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம், சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஷி தரூர் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “எங்கள் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் கொள்ளும் உறவுக்கு ஒரு விலை அட்டையை ஒட்டாதீர்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்குச் சம்பளம் வேண்டாம். எங்களுக்கே உரித்தான ஒரு குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக வீற்றிருக்க எங்களுக்குச் சம்பளம் வேண்டாம். எல்லாவற்றையும் தொழிலாகவும் பார்க்காதீர்கள். மாறாக உங்கள் மனைவியிடம், நேசிக்கும் பெண்ணிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். பெண்களுக்குத் தேவை நீங்கள் கொடுக்கும் மரியாதையும் பகிரும் அன்பும்தான். சம்பளம் அல்ல" என்று தெரிவித்துள்ளார் கங்கனா. இதனை தொடர்ந்து இது ட்விட்டரில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.