இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் குறித்து நடிகை கங்கனா ரணாவத் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "'தலைவி' படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்தது. இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நம்முடைய இப்பயணம் முடிவுக்கு வருகிறது. தேநீர், காபி, அசைவ உணவு, பார்ட்டிகள் என எதிலும் நீங்கள் விருப்பம் செலுத்த மாட்டீர்கள் என்பதே நான் உங்களிடம் கவனித்த முதல் விஷயம். உங்களை நெருங்குவது மிகக்கடினம் என நினைத்தேன். நீங்கள் என்றும் தூரமாக இருந்ததில்லை என்பது மெதுவாகத்தான் எனக்குப் புரிய ஆரம்பித்தது. நான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும்போது உங்களுடைய கண்கள் ஒளிர்ந்தன. பல வருடங்களாக உங்களை அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றிப் பேசும்போது அவர்கள் கண்களும் ஒளிர்கின்றன. நீங்கள் மனிதர் அல்ல; கடவுள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலைவி திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.