பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான சிறிய வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜூன் 25, 1975 அன்று கலவரம் நடப்பது போல் தொடங்குகிறது. பின்பு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார் என ஜே.பி. நாராயண் கதாபாத்திரம் தோன்றுகிறது. பிறகு பல சம்பவங்கள் வருகிறது. இறுதியாக இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வரும் கங்கனா, "இந்த நாட்டைப் பாதுகாப்பதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா தான் இந்திரா... இந்திரா தான் இந்தியா" எனப் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.
இப்படத்தைத் தாண்டி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் 'சந்திரமுகி 2' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.