2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.