சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் பல கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். அவர் தெரிவித்த சில கருத்துகளால், மஹாராஷ்டிரா அரசுக்கும் அவருக்கும் மோதல் வெடித்தது. கங்கனா ஒரு கட்டத்தில், மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மாறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கங்கனா அலுவலகம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்தது. மேலும், இது தொடர்பாக அவர் அலுவலக வாசலில் நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதன்பின் அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசரை கொண்டு இடித்து தள்ளினர் . இதனால் ஆத்திரமடைந்த கங்கனா, அவரது அலுவலகத்தை இடித்து தள்ளும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்ததோடு, தன் அலுவலகம் இடிக்கப்படுவது சட்டவிரோதம் எனவும், அதை நிறுத்த உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, கங்கனா அலுவலகத்தை இடிக்க, இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
மும்பை மாநகராட்சி, கங்கனா, தனது அலுவலகத்தில் 14 கட்டட விதிமுறைகளை மீறியதாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. இதற்கு பதில்மனு தாக்கல் செய்த கங்கனா ரனாவத், தன் அலுவலகத்தை இடித்தது சட்டவிரோதம் என்றும், அதற்கு நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மும்பை மாநகராட்சி, குடிமக்களின் உரிமைக்கு எதிரான, தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளது. கங்கனாவின் அலுவலகத்தை இடித்தது, அவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடனேயே செய்யப்பட்டது" என கூறிய மும்பை உயர்நீதிமன்றம், கங்கனாவின் அலுவலகத்தை இடிக்க, மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும் கங்கனா நஷ்ட ஈடு கோரியது சட்டப்படி செல்லும் என கூறிய நீதிமன்றம், அலுவலகத்தை இடித்த சேதத்தை கணக்கிட, மதிப்பீட்டாளர் நியம்பிக்கப்படுவர் எனவும், அவர் 2021 மார்ச் மாதத்திற்குள், நஷ்ட ஈடு தொடர்பாக முடிவெடுப்பார் எனவும் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இத்தீர்ப்பினை வரவேற்றுள்ள கங்கனா, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "ஒரு தனிப்பட்ட நபர், அரசாங்கத்தை எதிர்த்து நின்று வென்றால், அது அத்தனிநபரின் வெற்றியல்ல. ஜனநாயகத்தின் வெற்றி. எனக்கு தைரியம் அளித்தவர்களுக்கு நன்றி. அதேபோல், எனது கனவுகள் உடைந்தபோது சிரித்தவர்களுக்கும் நன்றி. நீங்கள் வில்லனாக இருப்பதால்தான், நான் ஹீரோவாக இருக்கிறேன்" என கூறியுள்ளார்.