பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறைமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். கடைசியாக இவர் நடிப்பில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படம் வெளியானது. அதன் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார்.
இந்த சூழலில் இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், "இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர், "எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "காலத்தால் அழியாத கலைப் படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் அண்ணன் மனோபாலா மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள்.