Skip to main content

"அந்தப் படத்தின் சாயல் நிறைய இருக்கிறது" - காந்தாரா படம் குறித்து கமல்ஹாசன் 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

kamalhassan about kantara

 

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். 

 

திரைப் பிரபலங்கள் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார்.

 

இந்த நிலையில் கமல்ஹாசன் காந்தாரா படம் பார்த்து ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து  ரிஷப் ஷெட்டிக்கு கமல் அனுப்பியுள்ள அறிக்கையில், ‘கடவுள் நம்பிக்கை அற்றவன் நான். இருப்பினும் பெரும்பாலானோருக்கு கடவுள் தேவைப்படுகிறது. அதைப் புரிந்து கொள்கிறேன். நமது புராணங்களில் கடவுள் இரக்கம் இல்லாமல் நடந்துகொள்வதாக வருகிறார்கள். அதை நானும் நம்புகிறேன். திராவிட இனத்தில் நாம் ஒரு தாய் வழிச் சமூகம். அது உங்கள் படத்தின் இறுதிக் காட்சியில் தெரிகிறது. தந்தையை விடத் தாயாக நடந்து கொள்கிறார் கடவுள். 

 

அப்படித்தான் ஒரு கலைப் படைப்பு உன்னதமான அந்தஸ்தைப் பெறுகிறது. எம்.டி வாசுதேவன் நாயரின் 'நிர்மால்யம்' என்ற படத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது என்று எனக்குத் தெரியும். உங்கள் படத்தில் அந்தப் படத்தின் சாயல்கள் உள்ளன. காந்தாரா படத்தின் சாதனையை அடுத்த படத்தில் முறியடியுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கமலின் இந்தப் பாராட்டுக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்