உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஸ் ப்ளட் கமியூனி என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு விரைந்து ரத்தம் வழங்கப்படவுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், "நான் விக்ரம் படத்தின் பாடலில் நடக்காத ஒன்றையும் எழுதவில்லை. உண்மையைத் தான் எழுதியிருக்கிறேன். ஏரி, குளம் எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்திங்கண்ணா என் மக்கள் எல்லாம் செத்துடுவாங்கய்யா என்பதைத்தான் ஞாபகப்படுத்தியிருக்கிறேன். ஒன்றியம் என்றால் நான் ஏதோ ஒரு அரசியல் கட்சியைத் தான் சொல்கிறேன் என்று கோவித்துக் கொள்கிறார்கள். நான் எல்லா ஒன்றியத்தைத் தான் சொல்கிறேன். தலைமைக்கு ஒரு கட்சி வந்துவிட்டால் சலாம் போட இது ஒன்னும் அரசாட்சி கிடையாது, மக்களாட்சி. அதில் கேள்விகள் கேட்கப்படும்.
இப்போது பிள்ளைகளே தங்களது அப்பாக்களிடம் கேள்வி கேட்கிறார்கள். எனக்கு ஏன் இந்த பெயர்? நான் அதை ஏன் செய்ய வேண்டும்? ஏன் என் பெயருக்கு பின்னால் சாதி போட வேண்டும்? என்று கேட்கும் பிள்ளைகளுக்கு அப்பன் பதில் சொல்லியாக வேண்டும். அப்படி என் பிள்ளை கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே எனது இரு மகள்கள் பிறந்த போதே பிறப்பு சான்றிதழில் இருந்து சாதி பெயரை நீக்கி விட்டேன். என்னால் முடிந்தது அவர்கள் நடமாடும் பாதையை குப்பைகள் இல்லாமல் செய்வதுதான். நான் செய்துவிட்டேன் எல்லாரும் செய்யணும்.
இந்த மாதிரியான விஷயங்கள் ரத்தம் கொடுக்கும் போது மறைந்து விடும். நீ எந்த சாதி நான் எந்த சாதி, நீ எந்த கடவுளை வணக்குற, நான் எந்த கடவுளை வணங்குறேன் என்ற அனைத்து விஷயங்களும் மறந்திடும். அண்ணன், தம்பி என்ற உறவு வலுப்பெறும்" என்றார்.