மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து, “ஒரு ரசிகனாக பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வந்தேன். படத்தை பார்த்த பிறகு எனக்குள் ஏற்பட்ட மலைப்பு ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக ஒரு உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. அது தமிழ் கலைஞனாக, தயாரிப்பாளராக பெருமிதம் கொள்கிறேன்.
ராஜராஜ சோழர் காலத்தில் இந்து மதம் என்றே பெயரே கிடையாது. வைணவம், சைவம், சமணம் என இருந்ததே தவிர இந்து என்று பெயரே இல்லை. அது வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர். எங்களுக்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார். இதெல்லாம் சரித்திரம். இப்போதைக்கு இதை எல்லாம் இங்கு கொண்டு வர வேண்டாம்" என தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து இவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. ராஜராஜ சோழன் இந்துதான் என்று ஒருதரப்பும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று ஒரு தரப்பினரும் விவாதித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது என தெரிவித்துள்ளார்.