Skip to main content

'அவரின் கையை பிடித்துக்கொண்டு கேட்டேன். அதுபோலவே அவர் செய்தார்' - மகேந்திரன் குறித்து கமல் உருக்கம் 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79. சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அஞ்சலி செலுத்திவிட்டு கமல்ஹாசன் பேசியபோது.....

 

kamal

 

"இயக்குனர் மகேந்திரனுடன் எனக்கு நீண்டநாள் நட்பு இருந்தது. படங்கள் நாங்கள் குறைவாக செய்திருந்தாலும், நட்பு வலுவாகவே இருந்தது. பக்கத்து ஊர் காரர். திறமையான மனிதர்களில் ஒருவர் என்று நான் வியந்தவர்களில் இவரும் ஒருவர்.  தங்கப்பதக்கம் படம் சமயத்திலுருந்தே எனக்கு தெரியும். முள்ளும் மலரும் படத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது. பாலு மகேந்திரா அவர்களையும், இவரையும் எங்கள் வீட்டில் சந்திக்க வைத்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. இருவரின் கையை பிடித்துக்கொண்டு வெற்றிப்படங்கள் கொடுங்கள் என்று சொன்னேன் அதுபோலவே அவர்கள் செய்தார்கள். அந்த படத்திற்கு மிகவும் கிட்டத்தட்ட புரொடக்ஷன் மேனஜர் அளவிற்கு கஷ்டப்பட்டு வேலைபார்த்தேன். ஒரு நல்ல படம் எக்காரணத்தை கொண்டும் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக அப்படி கடுமையாக உழைத்தோம். அந்த படம் தான் 'முள்ளும் மலரும்'. அதன் பிறகு தொடர்ச்சியாக நல்ல படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் மகேந்திரன். அவரை பார்த்து சினிமா எடுக்கவேண்டும் என்று ஒரு இளையக்கூட்டமே புறப்பட்டு வந்தது என்று சொன்னால் மிகையாகாது. அற்புதமான மனிதர். ஆரம்பத்தில் எளிமையாக இருந்தாலும் அவருடைய முடிவு உன்னதமான உச்சத்தை தொட்ட பிறகு தான் ஏற்பட்டிருக்கிறது என்பது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய செய்திருக்கலாம் மகேந்திரன் என்பதுதான் என் மனதில் இருக்கும் ஆதங்கம். மற்றபடி முழு வாழ்க்கை, நல்ல குடும்பம், அற்புதமான படைப்புகள், இவருடைய நினைவுகளை தமிழ் சினிமா என்றும் தாங்கி நிற்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்