பிரபல வில்லிசைப் பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்(93) வயது முதிர்வு காரணமாக இன்று (10.10.2022) காலமானார். வில்லிசை வேந்தர் எனப் போற்றப்படும் இவர் கடந்த 2005- ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும், 2021- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் வாங்கியுள்ளார். இவரது மறைவையொட்டி பல முன்னணி திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நல்லிசை பாடும் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்துற்றார். எப்போதும் சிரித்த முகம் சிரிக்க வைப்பதை நிறுத்திக்கொண்டது. கலைவாணர் பரம்பரையின் இறுதி நிழல் இவர்தான். கவிஞர் பாடலாசிரியர் கதாசிரியர் வில்லிசைக் கலைஞர் என்ற பன்முகம்கொண்ட நன்முகம் அடங்கிவிட்டது. குடும்பத்தார்க்கும் கலை நண்பர்களுக்கும் நெல்லை மண்ணுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கமல்ஹாசனும் சரத்குமாரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கமல், "வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி" என குறிப்பிட்டுள்ளார்.
சரத்குமார், "புகழ்பெற்ற வில்லிசைப்பாட்டு கலைஞர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் அவர்கள், வயது முதிர்வால் மறைந்த தகவல் வருத்தமளிக்கிறது. நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களுக்கு 60 படங்களுக்கு மேல் நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார் என்பதிலிருந்து அன்னாரின் நகைச்சுவை நயத்தை வியந்து பார்க்காமல் இருக்க இயலாது. அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். (1/2)— Kamal Haasan (@ikamalhaasan) October 10, 2022